தஃப்சீர் இப்னு கஸீர்

பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)

1 : 3 அல்ஃபாத்திஹா

(இம்மையில் மனிதன் புரியும் நன்மை - தீமை அனைத்துக்கும் ஒரு நாள் பிரதிபலன் கிடைத்தே தீரும். அன்று நன்மைக்குப் பரிசாகச் சொர்க்கமும், தீமைக்குத் தண்டனையாக நரகமும் வழங்கப்படும். அந்நாள்தான் உலக அழிவுக்குப் பிறகு வரும் மறுமை (கியாமத்) நாளாகும். அந்த நாளின் அதிபதியாக இருந்து, தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக இருப்பவன் அல்லாஹ்தான்.)

‘அதிபதி’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘மாலிக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (ஓர் ஓதல் முறைப்படி) இதை ‘மலிக்’ என்றும் சிலர் வாசித்துள்ளனர். இரண்டும் ஆதாரபூர்வமான சரியான ஓதல் முறைகள்தான். ‘மாலிக்’ எனும் சொல் ‘மில்க்’ (உடைமை) எனும் சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். (இதன்படி ‘மாலிக்’ என்பதற்கு ‘உரிமையாளன்’ என்று பொருள்.) ‘‘நிச்சயமாக, நாமே இந்தப் பூமிக்கும் அதில் உள்ளோருக்கும் உரிமையாளர் ஆவோம்’’ (19:40) என அல்லாஹ் கூறுகின்றான்.

‘மலிக்’ எனும் சொல் ‘முல்க்’ (ஆட்சியதி காரம்) எனும் சொல்லில் இருந்து கிளைத்ததாகும். (இதன்படி ‘மலிக்’ என்பதற்கு அரசன், ஆட்சியாளன் என்று பொருள்.) ‘‘அன்றைய தினம் ஆட்சியதிகாரம் எல்லாம் யாருக்குரியது (தெரியுமா)? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது’’ (40:16) என்கிறது குர்ஆன். ‘‘அன்றைய தினம் உண்மையான ஆட்சியதிகாரம் ரஹ்மானுக்கே உரியது’’ (25:26) என்கிறது மற்றொரு வசனம்.

‘பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி’ என்று கூறுவதால், மற்ற நாட்களுக்கு அல்லாஹ் அதிபதி அல்லன் என்று பொருளாகாது. ‘அகில உலகங்களின் இறைவன்’ (ரப்புல் ஆலமீன்) என முன்பே அல்லாஹ் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. இது இம்மை, மறுமை இரண்டுக்கும் பொருந்தும்.

இருப்பினும், (இம்மையில் மனிதர்கள்கூட ஆட்சியதிகாரத்திற்கும் சொத்துகளுக்கும் உரிமை கொண்டாடி, தங்களையும் ‘அதிபர்’ என்று சொல்லிக்கொள்கின்றனர். ஆனால்,) மறுமையில் அவ்வாறு யாரும் வாதிடவோ, அல்லாஹ்வின் அனுமதியின்றி எவரும் பேசவோகூட இயலாது. இதனாலேயே ‘மாலிகி யவ்மித் தீன்’ (மறுமை நாளின் அதிபதி) எனக் குறிப்பாகச் சொல்லப்பட்டது.

‘‘அந்நாளில் ரஹ்மான் யாருக்கு அனுமதி வழங்குகிறானோ அவர்கள் தவிர வேறு யாரும் பேச முடியாது’’ (78:38) என்கிறது குர்ஆன்.

‘‘அந்நாள் வரும்போது அல்லாஹ்வின் அனுமதியின்றி எவரும் பேச இயலாது’’ (11:105) என்கிறது மற்றொரு வசனம்.

உண்மையில் ‘அதிபதி’ (மாலிக்) எனும் பெயருக்குப் பொருத்தமானவன் அல்லாஹ் ஒருவனே. இவ்வுலகில் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கு ‘அதிபதி’ எனும் பெயர் வழங்கப்படுவதெல்லாம் உருவகம்தானே தவிர உண்மையல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உலக முடிவு நாளில்) அல்லாஹ் இந்தப் பூமியைக் கையகப்படுத்துவான். வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு, ‘‘நானே அதிபதி. (நானே அரசன்.) உலகத்தின் அரசர்கள் எங்கே? சர்வாதிகாரிகள் எங்கே? அகந்தை கொண்டவர்கள் எங்கே?’’ என்று கேட்பான்.47

‘மாலிகி யவ்மித் தீன்’ என்பதிலுள்ள ‘தீன்’ எனும் சொல்லுக்குப் பிரதிபலன், விசாரணை என்று பொருள். (இதன்படி ‘யவ்முத் தீன்’ என்றால் பிரதிபலன் அளிக்கப்படும் நாள்; அல்லது விசாரணை நாள் என்று பொருள்.)

அல்லாஹ் கூறுகின்றான்: நாம் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டபின் (மறுபடியும் உயிர் கொடுக்கப்பட்டு) பிரதிபலன் வழங்கப்பெறுவோமா? (என மனிதன் கேட்கி றான்.) (37:53)

இந்த வசனத்தில் ‘பிரதிபலன் வழங்கப்பெறல்’ என்பதைக் குறிக்க, ‘தீன்’ எனும் சொல்லின் செயப்பாட்டு வினையான ‘மதீனூன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.

‘‘புத்திசாலி யாரென்றால், சுய விசாரணை செய்துகொண்டு, இறப்புக்குப்பின் வரும் நாளுக்காகச் செயல்படுகின்றவன்தான்’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.48 இங்கு ‘விசாரணை’ என்பதைக் குறிக்க, ‘தீன்’ எனும் சொல்லின் வினைச்சொல்லான ‘தான’ என்பது ஆளப்பட்டுள்ளது.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (இறைவனால்) விசாரணை செய்யப்படுவதற்கு முன்பே சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள்.49

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘யவ்முத் தீன்’ என்பது மக்கள் விசாரணை செய்யப்படும் (மறுமை) நாளாகும். அந்நாளில் அவர்களின் வினைகளுக்கேற்ப பிரதிபலன் அளிக்கப்படும். வினை நல்லதாயின் பிரதிபலனும் நல்லதாக இருக்கும். வினை தீயதாயின் பிரதிபலனும் தீயதாகவே அமையும்; அல்லாஹ் யாரை மன்னிக்கின்றானோ அவரைத் தவிர.50