தஃப்சீர் இப்னு கஸீர்

பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)

1. அல்ஃபாத்திஹா - தோற்றுவாய்


திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயத்திற்கு1 ‘அல்ஃபாத்திஹா’ என்று பெயர் சூட்டப்பெற்றுள்ளது. ‘அல்ஃபாத்திஹா’ என்பதற்குத் தோற்றுவாய்; தொடக்கம்; ஆரம்பம் என்று பொருள். தொழுகைகளில் இந்த அத்தியாயமே ஆரம்பமாக ஓதப்படுகிறது என்பதால் இதற்கு இப்பெயர் வரலாயிற்று. இந்த அத்தியாயத்திற்கு ‘உம்முல் கிதாப்’ (குர்ஆனின் அன்னை) எனும் பெயரும் உண்டு. இந்த அத்தியாயமே குர்ஆன் ஏடுகளில் ஆரம்பமாக எழுதப்படுவதாலும், தொழுகையில் ஆரம்பமாக ஓதப்படுவதாலும் இதற்கு இப்பெயர் வரலாயிற்று என இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்)2 அவர்கள் கூறுகிறார்கள்: முதன்மையான ஒன்றுக்கு, அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய திரட்டுக்கு அரபியர் ‘உம்மு’ (அன்னை) என்பர். மூளையைச் சுற்றியுள்ள சவ்வுக்கு ‘உம்முர் ரஃஸ்’ (தலையின் அன்னை) என்றும், படைவீரர்களை ஓரணியில் ஒன்றுசேர்க்கின்ற இராணுவக் கொடிக்கு ‘உம்மு’ (அன்னை) என்றும் கூறுவதுண்டு.

கவிஞர் துர்ரும்மா கூறுகிறார்:3

அவன் தலையில்

நமது கொடி (உம்மு)

அதை நாம் பின்தொடர்வோம்.

நம் விவகாரங்களின்

சங்கமம் அக்கொடியே

அதற்கு நாம் மாறு செய்யோம்.

இந்த அத்தியாயம் குறித்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘‘இது குர்ஆனின் அன்னையாகும். திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் கொண்டதாகும். மகத்தான குர்ஆன் ஆகும்’’ என்று கூறினார்கள்.4

இந்த அத்தியாயத்திற்கு மேலும் பல பெயர்கள் உள்ளன. ‘அல்ஹம்த்’ (புகழ்), ‘அஷ்ஷிஃபா’ (நிவாரணி), ‘அல்வாகியா’ (பாதுகாப்பு அளிப்பது), ‘அல்காஃபியா’ (போதுமானது), ‘அசாசுல் குர்ஆன்’ (குர்ஆனின் அடிப்படை) ஆகிய பெயர்கள் அவற்றில் அடங்கும்.

‘அல்ஃபாத்திஹா’அத்தியாயத்தின் சிறப்பு

1. அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். அவர்களுக்கு நான் பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள், ‘‘(நான் அழைத்தபோது) நீங்கள் வராமலிருந்ததற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுதுகொண்டிருந்தேன் (அதனால்தான் உடனடியாக நான் பதிலளிக்கவில்லை)’’ என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் ‘(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்குப் பதிலளியுங்கள்’ என (8:24ஆம்வசனத்தில்) சொல்லவில்லையா?’’ என்று கேட்டார்கள். பிறகு, ‘‘நீங்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னால் குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன்’’ என்று சொன்னார்கள்.

பிறகு எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பின்னர் பள்ளிவாசலில் இருந்து அவர்கள் வெளியேற முற்பட்டபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை எனக்குக் கற்றுத் தருவதாகக் கூறினீர்களே!’’ என்றேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (என்று தொடங்கும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்)தான் அது. அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் கொண்டதும், எனக்கு அருளப்பெற்ற மகத்துவம் பொருந்திய குர்ஆனும் ஆகும்’’ என்றார்கள்.5

2. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தவ்ராத்’ வேதத்திலோ ‘இன்ஜீல்’ வேதத்திலோ உம்முல் குர்ஆனை (குர்ஆனின் அன்னை) போன்றதோர் அத்தியாயத்தை இறைவன் அருளியதில்லை. அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதாகும். மேலும், அதுஇறைவனுக்கும் அடியாருக்குமிடையே இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்டதாகும்.6

3. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒருபயணத்தில் சென்றுகொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது இளம்பெண் ஒருவர் வந்து, ‘‘எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப் பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?’’ என்று கேட்டாள்.

அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். ஆகவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களுடைய தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார்.

(ஓதிப்பார்க்கச்சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது அவரிடம், ‘உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?’ அல்லது ‘ஏற்கனவே, நீர் ஓதிப்பார்ப்பவராக இருந்தீரா?’ என்று கேட்டோம். அவர், ‘‘இல்லை; ‘குர்ஆனின் அன்னை’ என்றழைக்கப்படும் (‘அல்ஃபாத்திஹா’) அத்தியாயத்தைக் கொண்டுதான் ஓதிப்பார்த்தேன்’’ என்று சொன்னார்.

‘‘நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘செல்லாத வரையில்’ (இந்த முப்பது ஆடுகளையும்) அல்லது ‘சென்று (விளக்கம்) கேட்காத வரையில்’ ஒன்றும் செய்துவிடாதீர்கள்’’ என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கூறினோம். ‘‘இது (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத் தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.7

4. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்ட ஜிப்ரீல், வானத்தை அண்ணாந்து பார்த்தார். பிறகு, ‘‘வானில் இது வரை திறக்கப்படாதிருந்த ஒரு வாசல் இப்போது திறக்கப்பட்டிருக்கிறது; அதன் சப்தம்தான் இது’’ என்று கூறினார்.

அந்த வாசலில் இருந்து வானவர் ஒருவர் இறங்கி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘உங்களுக்குமுன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு பேரொளிகள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயமும் ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப்பெறாமல் இருப்பதில்லை’’ என்று கூறினார்.8

5. அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘யார் ஒருதொழுகையில் ‘உம்முல் குர்ஆன்’ (எனும் ‘அல்ஃபாத்திஹா’) அத்தியாயத்தை ஓதவில்லையோ அத்தொழுகை குறைபாடு உள்ளதும் முழுமையற்றதுமாகும்’’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘‘நாங்கள் இமாமுக்குப் பின்னால் இருக்கிறோம். (அப்போது என்ன செய்வது)?’’ என வினவப்பட்டது.

அதற்கு அவர்கள், ‘‘மனதுக்குள்ளேயே அதை ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்: ‘தொழுகையை எனக்கும் என் அடியாருக்குமிடையே இரு பாதிகளாக நான் பங்கிட்டுவிட்டேன்; என் அடியாருக்கு அவர் கேட்டது கிடைக்கும்’ என அல்லாஹ் கூறினான். அடியார் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (எல்லாப் புகழும் அனைத்துலக அதிபதி அல்லாஹ்வுக்கே உரியன) என்று கூறினால், ‘‘என் அடியார் என்னைப் புகழ்ந்துவிட்டார்’’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.

‘அர்ரஹ்மானிர் ரஹீம்’ (அருளாளன், அன்புடையோன்) என அடியார் கூறினால், ‘என் அடியார் என்னைப் போற்றினார்’ என அல்லாஹ் கூறுகின்றான். அடியார், ‘மாலிகி யவ்மித்தீன்’ (பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி) என்றால், அல்லாஹ், ‘‘என்னை என் அடியார் பெருமைப்படுத்திவிட்டார்’’ அல்லது ‘‘என்அடியார் என்னிடம் (அனைத்தையும்) ஒப்படைத்துவிட்டார்’’ என்பான்.

‘இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்’ (உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்) என அடியார் சொன்னால், ‘‘இது எனக்கும் என் அடியாருக்குமிடையிலானது. என் அடியாருக்கு அவர் கேட்டது கிடைக்கும்’’ என்கிறான் அல்லாஹ். அவர், ‘‘இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்’’ (எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக) என்று சொன்னால், ‘‘இது என் அடியாருக்குரியது; அவர் கேட்டது கிடைக்கும்’’ என்பான் அல்லாஹ்.9