தஃப்சீர் இப்னு கஸீர்

பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)

1 : 1 அல்ஃபாத்திஹா

(உண்மையில் புகழுக்குச் சொந்தக்காரன் ஏக இறைவனாம் அல்லாஹ் ஒருவனே. ஏனெனில், அவன்தான் அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலித்துக்கொண்டிருக்கின்றான். புகழுக்கும் போற்றுதலுக்கும் உரியவராக ஒருவர் இருக்க வேண்டுமென்றால், அதற்கான தரமும் தகுதியும் அவரிடம் அமைந்திருக்க வேண்டும். அத்தகைய எல்லாத் தகுதிகளும் உள்ளவன் அல்லாஹ் ஒருவனே. ஆதலால், எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உரியன.)

விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘அல்ஹம்து லில்லாஹ்’ என்பதன் பொருளாவது: அனைத்து விதமான நன்றிக்கும் உரியவன் அல்லாஹ் ஒருவனே. ஏனெனில், அவன்தான் எண்ணிலடங்கா அருட்கொடைகளைத் தன் அடியார்களுக்கு வழங்கியுள்ளான். அந்த அருட்கொடைகள் எத்தனை என்பதுகூட அவனுக்குத்தான் தெரியும்.

மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு வேண்டிய வாழ்வாதாரம், வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை வாரி வழங்கியுள்ள அல்லாஹ், தன்னை வழிபடுவதற்கு வேண்டிய உபகரணங்களையும், தன் கட்டளைகளை நிறைவேற்று வதற்குத் தேவையான உடலுறுப்புகளையும்கூட வழங்கியுள்ளான். ஆகவே, முதலும் முடிவுமான எல்லாப் புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே தகும். இதில் அவனையன்றி வழிபாடு செய்யப்படும் இதர (பொய்த்) தெய்வங்களுக்கோ, அவன் படைப்புகளில் வேறு யாருக்குமோ எந்தத் தகுதியும் கிடையாது.

‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறி தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளும் இறைவன், இவ்வாறு தன்னைப் புகழுமாறு அடியார்களுக்கு வழிகாட்டுகின்றான். இது, ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறுங்கள் என அவன் நமக்கு ஆணையிடுவதைப் போன்றுள்ளது. ஆயினும், அரபிமொழி அறிஞர்கள் ‘அல்ஹம்து’ (புகழ்), ‘அஷ்ஷுக்ர்’ (நன்றி) ஆகிய சொற்களை ஒன்றன் இடத்தில் மற்றொன்றைப் பயன்படுத்துவதுண்டு.

இப்னு ஜரீர் அவர்களுடைய இந்தக் கூற்று ஏற்புடையதன்று. ஏனெனில், பிற்கால அறிஞர்களில் பெரும்பாலோர் ‘அல்ஹம்த்’ எனும் புகழுக்கும், ‘அஷ்ஷுக்ர்’ எனும் நன்றிக்கும் இடையே வித்தியாசம் காட்டுகின்றனர். ‘அல்ஹம்த்’ என்பது, ஒருவரை அவருடைய தனிப்பட்ட மற்றும் பொதுவான குணநலன்களைக் குறிப்பிட்டு நாவால் பாராட்டுவதைக் குறிக்கும். ‘அஷ்ஷுக்ர்’ என்பது, ஒருவர் செய்த உபகாரத்திற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதைக் குறிக்கும். நாவாலும், உள்ளத்தாலும், உடல் உழைப்பாலும் இந்த நன்றியைத் தெரிவிக்கலாம்.

கவிஞர் சொல்கிறார்:

நீங்கள் செய்த உதவிக்காக

நன்றி (ஷுக்ர்) கூறும் மூன்று

என் கை, நாவு, கண்ணுக்குத்

தெரியாத என்மனம்

அல்ஜவ்ஹரீ37 (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்ஹம்த்’ (புகழ்) என்பது ‘தம்மு’ (இகழ்) என்பதன் எதிர்ச்சொல்லாகும். ‘அல்ஹம்த்’ என்பது ‘அஷ்ஷுக்ர்’ என்பதைவிடப் பொதுமையானது. உதவி புரிந்தவரை, அவர் செய்த உதவியை எடுத்துச்சொல்லிப் பாராட்டுவதே ‘ஷுக்ர்’ (நன்றி) ஆகும். ‘அவருக்கு நான் நன்றி கூறினேன்’ என்பதை ‘ஷகர்(த்)துஹு’, அல்லது ‘ஷகர்(த்)து லஹு’ என இருமுறைகளிலும் கூறலாம். இரண்டாவது முறையே தரமானதாகும்.

மற்றொரு சொல்லான ‘அல்மத்ஹ்’ என்பது ‘அல்ஹம்தை’விடவும் பொதுமையானது. உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள், தாதுப் பொருள் ஆகிய எதைப் பாராட்டினாலும் அது ‘அல்மத்ஹ்’ என்பதில் சேரும். இதைப் போன்றே, உதவுவதற்குமுன், உதவியதற்குப் பின், தனிப்பட்ட மற்றும் பொதுவான நற்பண்பு ஆகிய எதைப் பாராட்டினாலும் அதை ‘அல்மத்ஹ்’ எனலாம்.

‘அல்ஹம்து லில்லாஹ்’வின் சிறப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்துதிகளிலேயே மிகவும் சிறந்தது ‘லா இலாஹ இல்லல்லாஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்பதாகும். பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது ‘அல்ஹம்து லில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்பதாகும்.38

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் அடியார் ஒருவருக்கு அருட்கொடை ஒன்றை வழங்க, அவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று (நன்றியுடன்) கூறினால், அவர் முன்பு பெற்றதைவிட மேலான ஒன்றையே அவருக்கு அல்லாஹ் வழங்குவான்.39

மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்:

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர், ‘யா ரப்பி! லக்கல் ஹம்து கமா யன்பஃகீ லி ஜலாலி வஜ்ஹிக்க வ அழீமி சுல்தானிக்க’ (இறைவா! உனக்கே உரிய மாண்புக்கும் உன் மகத்தான அதிகாரத்திற்கும் ஏற்ற புகழ் யாவும் உனக்கே உரியன) என்று (இறைவனைப் புகழ்ந்து) உரைத்தார். நன்மை மற்றும் தீமைகளைப் பதிவு செய்யும் வானவர்கள் இருவரும் இதற்கு என்ன (நன்மைகளை) எழுதுவது என்று தீர்மானிக்க முடியாமல் தடுமாறினர்.

உடனே இருவரும் அல்லாஹ்விடம் சென்று ‘‘எங்கள் இறைவா! அடியார் ஒருவர் (உன்னைத் துதித்து) ஒரு வார்த்தை சொன்னார். அதற்கு என்ன (நன்மை) எழுதுவதென எங்களுக்குத் தெரியவில்லை’’ என்றனர். ‘‘அப்படி அவர் என்ன சொன்னார்’’ என -அதுஎன்ன என்பதைத் தெரிந்திருந்தும்- அல்லாஹ் கேட்டான்.

அதற்கு அவ்வானவர்கள், ‘‘லக்கல் ஹம்து யா ரப்பீ! கமா யன்பஃகீ லி ஜலாலி வஜ்ஹிக்க வ அழீமி சுல்த்தானிக்க’’ என்று அவர் கூறினார், இறைவா!’’ என்று பதிலளித்தனர். அப்போது அல்லாஹ், ‘‘என் அடியார் சொன்னதை அப்படியே பதிவு செய்யுங்கள். அவர் என்னைச் சந்திக்கும்போது நானே அவருக்கு உரிய பிரதிபலனை அளிப்பேன்’’ என்று கூறினான்.40

அடுத்து ‘அல்ஹம்த்’ எனும் சொல்லில் உள்ள ‘அல்’ எனும் வரைநிலை இடைச் சொல்லானது, அனைத்து வகையான புகழும் அல்லாஹ்வுக்கே உரியன என்ற பொதுமைப் பொருளை இங்கு தருகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு ஹதீஸ் வந்துள்ளது: இறைவா! புகழ் அனைத்தும் (அல்ஹம்து) உனக்கே உரியன. ஆட்சியதிகாரம் அனைத்தும் உன்னுடையதே. நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே. எல்லாக் காரியங்களின் முடிவும் உன்னிடமே.41

ரப்பில் ஆலமீன்

இச்சொற்றொடருக்கு, ‘அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்றவன்’ என்று பொருள். இதிலுள்ள ‘ரப்பு’ எனும் சொல்லுக்கு ‘அதிகாரம் படைத்த உரிமையாளன்’ என்று பொருள். தலைவனுக்கும், சீர்படுத்துகின்றவனுக்கும்கூட அகராதியில் ‘ரப்பு’ எனப்படும். இந்த எல்லாப் பொருட்களுமே அல்லாஹ் விஷயத்தில் பொருந்தக்கூடியவைதாம். ‘ரப்பு’ எனும் சொல்லை அல்லாஹ் அல்லாதவருக்குப் பயன் படுத்துவதானால் மற்றொன்றுடன் இணைத்தே பயன்படுத்த வேண்டும். உதாரணம்: ‘ரப்புத் தார்’ (வீட்டு உரிமையாளர்). ‘அர்ரப்பு’ எனப் பொதுவாகக் கூறினால் அது அல்லாஹ்வை மட்டுமே குறிக்கும்.

இதிலுள்ள ‘அல்ஆலமீன்’ எனும் சொல் ‘ஆலம்’ (அகிலம்) என்பதன் பன்மையாகும். இது, அல்லாஹ்வைத் தவிரவுள்ள அனைத்துப் பொருட்களையும் குறிக்கும். இதற்கு அதே சொல்லில் ஒருமை இல்லை. வானங்களிலுள்ள படைப்புகள், தரையிலுள்ள படைப்புகள், கடலிலுள்ள படைப்புகள் ஆகிய பல்வேறு இனங்க ளையே ‘அகிலங்கள்’ எனும் பன்மை சுட்டுகிறது.`

ஃபர்ரா42 மற்றும் அபூஉபைத்43 (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:

‘ஆலம்’ என்பது பகுத்தறிவுள்ள மனிதன், ஜின், வானவர் மற்றும் ஷைத்தான் ஆகியோரை மட்டுமே குறிக்கும்; விலங்குகளை இச்சொல் குறிக்காது.

அஸ்ஸஜ்ஜாஜ்44 (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இம்மையிலும் மறுமையிலும் இறைவன் படைக்கின்ற அனைத்தும் ‘ஆலம்’ என்பதில் அடங்கும். இதுவே சரியான கருத்தாகும் என்கிறார் விரிவுரையாளர் குர்துபீ (ரஹ்) அவர்கள். ஏனெனில், இதுதான் அனைத்துலகத்திற்கும் பொருந்துகிறது. அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘அகிலத்தாரின் இறைவன் யார்?’’ என்று ஃபிர்அவ்ன் கேட்டான். அதற்கு மூசா ‘‘வானங்களுக்கும் பூமிக்கும் அவற்றுக்கிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே அவன்’’ என்று பதிலளித்தார். (26:23,24)

‘ஆலம்’ என்பது ‘அலாமத்’ (அடையாளம்) எனும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். அகிலமானது, அதைப் படைத்தவன் ஒருவன் இருக் கின்றான் என்பதற்கும், அவன் ஏகன் என்பதற்கும் அடையாளமாக இருப்பதால் அதற்கு இப்பெயர் வந்தது.

கவிஞர் இப்னுல் முஅதஸ்ஸு45 (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

விந்தைதான்!

இறைவனுக்கு எவ்வாறுதான்

மாறு செய்கின்றனரோ!

மறுப்போர் எவ்வாறுதான்

அவனை மறுக்கின்றனரோ!

அனைத்துப் பொருட்களிலும்

அவனுக்கோர் சான்று

நற்சான்று பகரும்

அவன் ஏகன் என்று.