தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)
2 : 1-2 அல்பகரா
அலிஃப், லாம், மீம்
திருக்குர்ஆன் அத்தியாயங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளஅலிஃப், லாம், மீம் போன்ற தனித்தனி எழுத்துகள் தொடர்பாக விரிவுரையாளர்களிடையே வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அந்தத் தனித்தனி எழுத்துகளுக்கான பொருள் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதால், அவனைத் தவிர வேறு யாரும் அதை விளங்கிக்கொள்ளஇயலாது என்று சிலர் கூறுவர். ஆகவே, அவர்கள் எந்த விளக்கமும் இவற்றுக்கு அளிக்கவில்லை.
இதை குர்துபீ (ரஹ்) அவர்கள் தமது விரிவுரையில்குறிப்பிட்டுள்ளார்கள்.
வேறுசிலர் இந்தத் தனித்தனி எழுத்துகளுக்குவிளக்கமளிக்க முனைந்துள்ளனர். அவர்களும் வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். இந்த எழுத்துகள் அத்தியாயங்களின் பெயராகும் என்று சிலர் கூறுகிறார்கள். இதுதான் பெரும்பாலோரின் ஒருமித்த கருத்தாகும் என விரிவுரையாளர் ஸமக்க்ஷரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.7
மற்றச் சிலர், அவை இறைவனின் திருநாமங்கள்; அவற்றை வைத்து அத்தியாயங்களைஇறைவன் தொடங்கியுள்ளான் என்று கூறுகிறார்கள். இதன்படி ஒவ்வொரு எழுத்தும் இறைவனின் திருநாமங்கள் மற்றும் பண்புப் பெயர்களில் ஏதாவது ஒன்றைக் குறிக்கும்.
உதாரணமாக, அலிஃப், லாம், மீம் என்பதில் உள்ள அலிஃப், ‘அல்லாஹ்’ எனும் பெயரின் முதல் எழுத்தையும், லாம், ‘லதீஃப்’ (நளினமானவன்) என்ற பெயரின் ஆரம்ப எழுத்தையும், மீம், ‘மஜீத்’ (கண்ணியம் நிறைந்தவன்) என்ற பெயரின் தொடக்க எழுத்தையும் குறிக்கும்.
அத்தியாயங்களின் தொடக்கத்தில்இடம்பெற்றுள்ள இத்தகைய தனித்தனி எழுத்துகள் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பேசுகிற அதே மொழி, அதே எழுத்துகள்தான்இவை என்றாலும், (அவற்றின் பொருளை அறிய முடியாத காரணத்தால்) குர்ஆனோடு போட்டியிடும் சக்தி மக்களுக்குக் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்என்று மற்றச் சிலர் கூறுகிறார்கள்.
இக்கருத்தை முபர்ரத் (ரஹ்) அவர்கள்8 உள்ளிட்ட வல்லுநர்கள் தெரிவித்திருப்பதாக ராஸீ (ரஹ்) அவர்களும், ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக குர்துபீ (ரஹ்) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். ஸமக்க்ஷரீ (ரஹ்) அவர்களும் இக்கருத்தை பலமாக ஆதரித்துள்ளார்கள். இமாம் இப்னு தைமிய்யா9 மற்றும் அபுல்ஹஜ்ஜாஜ்அல்முஸ்ஸீ (ரஹ்) போன்றோரின் கருத்தும் இதுதான்.
ஸமக்க்ஷரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தத் தனி எழுத்துகள் மொத்தமாகக் குர்ஆனின் தொடக்கத்தில்இடம்பெற்றுவிடவில்லை; மாறாக, குர்ஆனில் பரவலாகப் பல்வேறு அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் இடம்பெற்றுள்ளன.
இதன்மூலம், குர்ஆன் (தன்னைப் போன்றதோர் உரையைக் கொண்டுவாருங்கள் பார்க்கலாம்என) விடுக்கும் அறைகூவல் அழுத்தம் பெறுகிறது. ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள்திரும்பத் திரும்பக் கூறப்படுவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இஃதன்றி, வெளிப்படையானஅறைகூவலும் பல இடங்களில் காணப்படுகிறது.
தனித்தனி எழுத்துகள் சில இடங்களில் வெறும் ஒற்றை எழுத்தாக மட்டுமே இருக்கும். (38:1ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஸாத்’ எனும் எழுத்தைப் போன்று.
வேறுசில இடங்களில் இரட்டை எழுத்துகளாகவும் இருப்பதுண்டு. (40-46:1 ஆகிய வசனங்களில் இடம்பெற்றுள்ள) ஹா, மீம் ஆகிய எழுத்துகளைப்போன்று. இன்னும் சில இடங்களில் மூன்று எழுத்துகளாகஅமைந்திருப்பதும் உண்டு. (2, 3, 29, 30, 31, 32:1 ஆகிய வசனங்களில் வந்துள்ள) அலிஃப், லாம், மீம் ஆகிய எழுத்துகளைப் போன்று.
(7:1ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ள) அலிஃப், லாம், மீம், ஸாத் ஆகியவற்றைப்போன்று நான்கு எழுத்துகளாகவும், (19:1ஆம் வசனத்தில் வந்துள்ள) காஃப், ஹா, யா, அய்ன், ஸாத் ஆகியவற்றைப்போன்று ஐந்து எழுத்துகளாகவும் இருக்கலாம். ஐந்துக்கும் மேற்பட்ட தனித்தனி எழுத்துகள் ஏதும் இடம்பெறவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், அரபிமொழி வார்த்தைகள் ஒன்று முதல் ஐந்து வரையிலான எழுத்துகள் கொண்டவையாகவே இருக்கும். அதைவிட அதிக எழுத்துகள் கொண்ட வார்த்தை கிடையாது. (அதற்கு ஏற்பவே அத்தியாயங்களின் தொடக்கத்தில்இடம்பெற்றுள்ள தனித் தனி எழுத்துகளும்ஐந்துக்குமேல் இல்லை.)
(தனித்தனி எழுத்துகளின்பொருளை அறிய முடியாத நிலையில்) அவை ஓர் அறைகூவலாக இருப்பதால்தான், இந்த எழுத்துகளால்தொடங்கப்பட்டுள்ள ஒவ்வோர் அத்தியாயத்திலும் குர்ஆனின் வெற்றி, அதன் மகத்துவம், பிறரை இயலாமையில் ஆழ்த்தும் விதம் ஆகியவை பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாயிற்று. குர்ஆனில் 29 அத்தியாயங்களைஆராய்ந்ததில் இது தெரிய வருகிறது.
எடுத்துக்காட்டாக, ‘‘அலிஃப், லாம், மீம். இந்த வேதம் இ(றைவேதம்தான்என்ப)தில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.’’ (2:1,2)
‘‘அலிஃப், லாம், மீம். அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன்; நிலையானவன். (நபியே!) உம்மீது சத்தியமான இந்த வேதத்தை அவனே அருளினான்.’’ (3:1-3)
‘‘அலிஃப், லாம், ரா. (இது) நாம் உமக்கு அருளிய வேதமாகும்.’’ (14:1)
‘‘அலிஃப், லாம், மீம். (இது) அகிலத்தாரின் அதிபதியிடமிருந்து அருளப்பெற்ற வேதமாகும். இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.’’ (32:1,2)
‘‘ஹா, மீம். (இது) அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோனிடமிருந்து அருளப்பெற்றதாகும்.’’ (41:1,2)
இன்னும் இக்கருத்தை வலியுறுத்தும் வசனங்கள் பல உண்டு. (இவையனைத்திலும் மேற்கண்ட தனித்தனி எழுத்துகளுக்குப் பின்னர் குர்ஆனின் கண்ணியம், அதன் மேலாண்மை, அதன் தகுதி போன்றவை தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருப்பது) கூர்மையாகச்சிந்திப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
இந்த வேதம் (தாலிகல் கிதாப்)
‘இந்த வேதம்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘தாலிகல் கிதாப்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. (உண்மையில் இதற்கு ‘அந்த வேதம்’ என்றே பொருள். இருப்பினும், வேதம் அருகிலேயே இருப்பதால்) இதற்கு ‘இந்த வேதம்’ எனப் பொருள் கூறப்படுகிறதுஎன இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அரபுகள் சுட்டுப் பெயர்ச்சொற்களான ‘ஹாதா’ (இது) மற்றும் ‘தாலிக’ (அது) ஆகிய இரண்டையும் தொலைவு, அண்மை என்று வேறுபடுத்தாமல்ஒன்றை மற்றொன்றின்இடத்தில் பயன்படுத்துவதுண்டு. இது அரபுகளின் வழக்கில் அறியப்பட்ட ஒன்றுதான். இந்த அடிப்படையிலேயே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறுகூறியுள்ளார்கள். எனவே ‘தாலிகல் கிதாப்’’ என்பதற்கு ‘இந்த வேதம்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வசனத்தில் ‘இந்த வேதம்’ என்று பொருள்படும் ‘தாலிகல் கிதாப்’ என்பதில் உள்ள ‘அல்கிதாப்’ எனும் சொல் குர்ஆனையே குறிக்கும். தவ்ராத் மற்றும் இன்ஜீல் போன்ற முந்தைய வேதங்களையே இது குறிக்கிறதுஎன்று சிலர் கூறுவர். இவர்கள் தமக்கு அறிவில்லாத ஒன்றில் வலியச் சென்று தலையிடும் வீண் முயற்சியில்மூழ்கி தமது நோக்கத்தைத் தொலைத்துவிட்டவர்கள் ஆவர்.
சந்தேகம் (ரைப்)
‘‘இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை’’ என்று பொருள்படும் ‘‘லா ரைப ஃபீஹி’’ எனும் வசனத்தொடரில் உள்ள ‘ரைப்’ எனும் சொல்லுக்குச் ‘சந்தேகம்’ என்று பொருள். நபித்தோழர்களில் பலர் இவ்வாறே அறிவித்துள்ளனர். ‘‘இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’’ என்று இப்னு அபீஹாத்திம் (ரஹ்)10 அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ‘ரைப்’ எனும் சொல்லுக்கு ‘குறை கூறல்’ என்ற பொருளும் உண்டு. கவிஞர் ஜமீல் கூறுகின்றார்:11
புஸைனா சொன்னாள்:
ஜமீலே! என்னைக்குறித்து
நீர் குறை சொன்னீர்;
நான் சொன்னேன்: நாமிருவருமே
குறை சொல்வோர்தாமே!12
‘தேவை’ எனும் பொருளிலும் ‘ரைப்’ எனும் சொல் வழங்கப்படுகிறது. ஒரு கவிஞர் சொன்னார்:
எங்களின் எல்லா
‘ரைப்’ (தேவை)களையும்
திஹாமா மற்றும் கைபரிலேயே
நிறைவேற்றிவிட்டு
எங்களின் வாட்களுக்கு
ஓய்வளித்தோம்.
ஆக, இந்த வேதம் இறைவனால் அருளப்பெற்றது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என்பது வசனத்தின் பொருளாகும். ‘‘(இது) அகிலத்தாரின்அதிபதியிடமிருந்து அருளப்பெற்றவேதமாகும். இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை’’ (32:2) என்கிற வசனமும் இக்கருத்தையேஅறிவிக்கிறது.
‘‘இதில் எந்தச் சந்தேகமும் இல்லை’’ (லா ரைப ஃபீஹி) என்பது (சொல்லளவில்) ஒரு ‘தகவல் வாக்கியமாக’ இருந்தாலும்பொருளில் ‘விலக்கல் வினை’ ஆகும். அதாவது ‘‘இதில் எவ்விதச் சந்தேகமும் கொள்ளாதீர்’’ எனப் பொருள் விரியும்.
ஐயமும் தெளிவும்
‘‘இது இறையச்சமுடையோருக்கு நேர்வழி காட்டுகின்றது’’ எனும் தொடர், குர்ஆன் இறையச்சம் உடையோருக்கு மட்டுமே நேர்வழி காட்டும் என்று குறிப்பாக உணர்த்துகிறது. இதைப் பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன:
இ(வ்வேதமான)து இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நோய் நிவாரணியாகவும்உள்ளது என (நபியே!) நீர் கூறுவீராக. (41:44)
இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நிவாரணியாகவும் உள்ளதைக் குர்ஆனில் நாம் அருளியுள்ளோம். (17:82)
இன்னும் இவை போன்ற பல வசனங்கள், குர்ஆன் மூலம் இறைநம்பிக்கையார்களே பயனடைவர் என்று காட்டுகின்றன. (அப்படியானால், குர்ஆன் அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்டாதா என்கிற கேள்வி பிறக்கிறது. அதன் பதிலாவது:)
குர்ஆனைப் பொருத்தமட்டில்அது அனைவருக்கும்நேர்வழிகாட்டிதான். ஆனால், குர்ஆனால் பயனடைவோர் நல்லவர்கள்தான். இதையே மற்றொரு வசனத்தில், ‘‘(இந்தக் குர்ஆன்) நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழி காட்டியாகவும் அருளாகவும் அமைந்துள்ளது’’ (10:57) என அல்லாஹ் கூறுகின்றான். அதாவது ‘‘இறையச்சமுடையோருக்கு (வழிகாட்டும்) ஒளியாகும்’’ என்று பொருள். இதை விரிவுரையாளர்சுத்தீ (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நேர்வழி (ஹுதா)
‘நேர்வழி’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஹுதா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘நேரான பாதை’ என்று பொருள். சில வேளைகளில் ‘உள்ளத்தில் நிலைக்கும் இறைநம்பிக்கை’ எனும் பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.
இதன்படி, மக்களின் உள்ளங்களில் இறைநம்பிக்கையைநிலைபெறச் செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. (மனிதர்களால்இத்தகைய நேர்வழியை அளிக்க இயலாது.) பின்வரும் வசனங்கள் இதை உறுதிசெய்கின்றன:
(நபியே!) நீங்கள் விரும்பியவர்களை யெல்லாம் நேர்வழியில் சேர்க்க உங்களால் இயலாது. எனினும், அல்லாஹ்தான், தான் நாடியவர்களைநேர்வழியில் சேர்க்கின்றான். (28:56)
(நபியே!) அவர்களை நேர்வழியில் சேர்ப்பது உங்களின் பொறுப்பல்ல. அல்லாஹ்வேதான் நாடியவர்களைநேர்வழியில் சேர்க்கின்றான். (2:272)
எவரை அல்லாஹ் தவறான வழியில் சேர்த்துவிடுகிறானோ அவரை நேரான வழியில் சேர்ப்பார் எவரும் இலர். (7:186)
உண்மையை விளக்கிச் சொல்லி அதை அடையாளம் காட்டுவதற்கும் ‘ஹுதா’ என்பர். பின்வரும் வசனங்களில் இதே (‘வழிகாட்டல்’ எனும்) பொருளில்தான்இச்சொல் ஆளப்படுகிறது:
(நபியே!) நிச்சயமாக நீங்கள் நேரான வழியைக் காட்டுகிறீர்கள். (42:52)
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஒரு நேர்வழி காட்டி உண்டு. (13:7)
ஸமூத் கூட்டத்தாருக்கு நாம் நேர்வழி காட்டினோம். ஆனால், அவர்களோ நேர்வழியை விடுத்து இருளையே விரும்பினர். (41:17)
இறையச்சமுடையோர் (முத்தகீன்)
‘‘இறைவனுக்கு இணைவைப்பதைக்கைவிட்டு, இறைவழிபாட்டில்ஈடுபாடு கொண்டுள்ள இறைநம்பிக்கையாளர்கள்தான் இறையச்சமுடையோர் (முத்தகீன்) ஆவர்’’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
‘‘இறைவனால் விதிக்கப்பட்டவற்றை நிறைவேற்றி, விலக்கப்பட்டவற்றைத் தவிர்த்துக் கொள்பவர்களேஇறையச்சம் உடையோர்’’ என ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘‘மறைவானவற்றை நம்பி, தொழுகையைக் கடைப்பிடித்துநாம் வழங்கிய (செல்வத்)திலிருந்து (பிறருக்குச்) செலவும் செய்து வருகிறவர்கள்’’ என்று (2:3ஆவது இறைவசனத்தில்) அல்லாஹ் யாரைக் குறிப்பிடுகிறானோ அவர்கள்தான் இறையச்சமுடையோர் எனக் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மேற்சொன்ன எல்லாக் கருத்துகளுக்குமே இவ்வசனம் பொருந்தும் என்பது இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது முடிவாகும். நபிமொழி ஒன்று அன்னாரின் கூற்றை உறுதி செய்கிறது: பாவமான ஒரு செயல்மீது கொண்ட எச்சரிக்கை உணர்வால் பாவமில்லாத ஒன்றையும் கைவிடாத வரை ஒருவர் இறையச்சமுடையோரின் தகுதியை எட்ட முடியாது.13
‘இறையச்சம்’ என்பதைக் குறிக்கும் ‘தக்வா’ எனும் சொல் ‘விகாயத்’ (பாதுகாத்துக்கொள்ளல்) எனும் வேர்ச்சொல்லில்இருந்து பிறந்ததாகும். வெறுக்கத் தக்க செயல்களிலிருந்து ஒருவர் தம்மைத் தற்காத்துக்கொள்வதே ‘தக்வா’ என்பதன் அடிப்படையாகும். கவிஞர் கூறுகிறார்:
அவள் அணிந்துகொண்டாள்
முகத்திரை
மீறித் தாக்கியது கோர வெயில்;
தவிர்த்துக் காத்தது
அவள் தளிர்க்கரம்.14
உமர் (ரலி) அவர்கள் ‘தக்வா’ என்றால் என்ன என்று உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் கேட்டபோது ‘‘முட்கள் நிறைந்த பாதையில் நீங்கள் நடந்ததுண்டா?’’ என உபை (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். ‘ஆம் நடந்துள்ளேன்’ என்று உமர் (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள்.
‘‘அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?’’ என்று மறுபடியும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கேட்க, ‘‘சிரமப்பட்டு எச்சரிக்கையோடுநடந்தேன்’’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் ‘‘அந்த (எச்சரிக்கை உணர்வோடு தீமைகளிலிருந்து விலகி வாழும்) நிலைதான் ‘தக்வா’ ஆகும்’’ என்று உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
இதே கருத்தைக் கவிஞர் இப்னுல் முஅதஸ்ஸு பின்வரும் தமது கவிதையில் வெளியிட்டுள்ளார்:
விட்டுவிடு!
சிறு - பெரும்பாவங்கள்
முற்றிலுமாய்
அதுவே இறையச்சம்.
செயல்படு!
முட்களின் பூமியில்
நடப்பவன்போல்
மிகுந்த எச்சரிக்கையாய்.
கருதிவிடாதே!
சிறுபாவத்தையும் சாதாரணமாய்.
ஏன் தெரியுமா?
பொடிக்கற்களால்தான்
பெரு மலைகள்.
ஒருவர் அடைகிற நன்மைகளில் முதன்மையானதுஇறையச்சம் (தக்வா)தான்; மற்றவையெல்லாம்அதற்கு அடுத்தவையே என்பதைப் பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இறையச்சத்திற்கு அப்பால் ஒருவர் அடைகிற நன்மை நல்ல (பண்புடைய) மனைவியே! (அவளது குணம் எவ்வாறிருக்கும் என்றால்,) கணவன் தன்னைப் பார்க்கும்போது அவனுக்கு அவள் மகிழ்வூட்டுவாள். கணவனின் கட்டளைக்கு அவள் பணிந்து நடப்பாள். அவளை நம்பி அவன் ஒரு சத்தியம் செய்தால், அதை அவள் காப்பாள். கணவன் வெளியில் சென்றுள்ளபோது அவனது சொத்தையும் தன்னையும் பாதுகாத்துக்கொள்வாள்.15