தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)
1 : 6,7 அல்ஃபாத்திஹா
முந்தைய வசனத்தில் குறிப்பிடப்பெற்ற ‘நேரான வழி’ என்ன என்பதை இவ்வசனம் விவரிக்கின்றது. இறைவனின் கோபத்திற்கு ஆளாகாமலும் வழிதவறிச் செல்லாமலும் இருந்து, இறையருளுக்கு இலக்கானவர்கள் எவ்வழியில் நடந்தார்களோ அவ்வழியே ‘நேரான வழி’ ஆகும் என இவ்வசனம் கூறுகிறது. இறையருளுக்கு இலக்கானவர்கள் யார் என்பதை மற்றொரு வசனம் விவரிக்கிறது:
யார் அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், வீரத் தியாகிகள் மற்றும் நல்லவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள்தான் நல்ல நண்பர்கள் ஆவர். (4:69)
இதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை வழிபடுவதன் மூலம் இறையருளைப் பெற்ற வானவர்கள், இறைத் தூதர்கள், வாய்மையாளர்கள் (ஸித்தீகீன்), வீரத் தியாகிகள் (ஷுஹதா) மற்றும் நல்லவர்கள் (ஸாலிஹீன்) ஆகியோர் சென்ற வழியே நேரான வழியாகும். இறைத்தூதர்கள்தான் இறையருளைப் பெற்றவர்கள் என ரபீஉ பின் அனஸ் (ரஹ்)54 அவர்களும், இறைநம்பிக்கையாளர்கள்தான் அவர்கள் என இப்னு ஜுரைஜ்55 மற்றும் முஜாஹித் (ரஹ்) ஆகியோரும் கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் விளக்கமே அனைத்தையும் உள்ளடக்கிய பொதுவான விளக்கமாகும்.
சத்தியத்தை அறிந்த பிறகும் அதிலிருந்து வழிபிறழ்ந்தவர்களே இறைவனின் கோபத்திற்கு ஆளானவர்கள் ஆவர். சத்தியத்தை அறிந்துகொள்ளத் தவறி வழிகேட்டில் மூழ்கிக் கிடப்பவர்களே வழிதவறியோர் ஆவர். இவர்களின் வழியில் எங்களைச் செலுத்திவிடாதே என்பதே அத்தியாயத்தின் இறுதித் தொடரின் பொருளாகும்.
இறைவனின் சினத்திற்கு ஆளானோர் ஒரு பிரிவினர்; வழிதவறியோர் மற்றொரு பிரிவினர் எனத் தனித் தனியே இரு தவறான வழியினரைப் பிரித்துக்காட்டி, இவ்விரு வழிகளிலிருந்தும் அனைவரும் விலகிவிட வேண்டும் என்பதை உணர்த்தும் முகமாகவே (‘வலள் ளால்லீன்’ எனும் சொற்றொடரில்) ‘லா’ எனும் எதிர்மறை இடைச்சொல் (மீண்டும்) கொண்டுவரப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்தியத்தை அறிந்துகொண்டே அதன்படி செயல்படத் தவறியவர்கள் யூதர்கள் ஆவர். இதனால் இறைவனின் சினத்திற்கு அவர்கள் ஆளானார்கள். சத்தியத்தை அறிந்துகொள்ளத் தவறியவர்கள் கிறித்தவர்கள் ஆவர். இதனால் அவர்கள் வழிதவறியவர்களாகின்றனர். உண் மையான இறைநம்பிக்கையாளர்கள் சத்தியத்தை அறிந்து அதன் வழி நடப்பார்கள். இவர்களே நேரான வழியில் நடப்பவர்கள் ஆவர்.
‘இறைவனின் கோபத்திற்கு ஆளானோர்’ என்பது யூதர்களைத் தனித்து அடையாளம் காட்டும் அடைமொழியாகும். அவர்களைக் குறித்தே, ‘‘அல்லாஹ்வின் சாபத்திற்கும் கோபத் திற்கும் ஆளானோர்’’ (5:60) என மற்றொரு வசனம் கூறுகிறது. இதைப் போன்றே, ‘வழி தவறியோர்’ என்பது கிறித்தவர்களை அடையாளப்படுத்தும் அடைமொழியாகும். ‘‘அவர்கள் பலரை வழிதவறச் செய்ததுடன் தாங்களும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டனர்’’ (5:77) என அவர்கள் குறித்தே இறைவன் தெரிவிக் கின்றான்.
இதே கருத்து நபிமொழிகளிலும், நபித் தோழர்களின் கூற்றுகளிலும் காணப்படுகிறது. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ‘ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம்’ (இறைவனின் கோபத்திற்கு ஆளானோர்) யார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அதற்கு ‘‘யூதர்களே அவர்கள்’’ என நபியவர்கள் பதிலளித்தார்கள். ‘வலள் ளால்லீன்’ (வழிதவறியோர்) யார் என வினவி னேன். அதற்குக் ‘கிறித்தவர்கள்’ என பதிலளித்தார்கள்.56
ஆமீன்
‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓதிய பிறகு ‘ஆமீன்’ என்று கூறுவது விரும்பத் தக்கதாகும். ‘ஆமீன்’ என்பதற்கு ‘‘இறைவா! ஏற்பாயாக!’’ என்று பொருள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ‘ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ என்று ஓதியவுடன் ‘ஆமீன்’ என்று கூறுவார்கள். அது, அவர்களுக்கருகில் முதல் அணியில் நிற்பவர்களின் செவிகளுக்குக் கேட்கும்.57
அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின் உட்பொதிவு
ஏழு வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்தின் உட்பொதிவாய் இறைவனைப் போற்றிப் புகழ்தல், அவனுக்குரிய உயர் பண்பு களை உணர்த்தும் திருநாமங்களைக் கூறி அவனைப் பாராட்டுதல், மறுமை, இறைவனிடம் பணிந்து வேண்டுதல், அடியார்கள் தமக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை முன்மொழிதல், வணக்க வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தகும் என்பதை வெளிப்படுத்துதல், அல்லாஹ்வுக்கு இணையோ துணையோ இல்லை என்பதை எடுத்துக்கூறி ஏகத்துவ இறைக்கொள்கையை ஏற்றல், நேரான வழியில் (செம்மை மார்க்கத்தில்) செலுத்துமாறும் அதில் நிலைத்திருக்க வகை செய்யுமாறும் அல்லாஹ்விடம் வேண்டுதல், அதன்மூலம் நபிமார்கள், வாய்மையாளர்கள், வீரத் தியாகிகள், நல்லோர் ஆகியோருக்கு அருகில் சொர்க்கத்தில் இருக்கும் பேற்றினை வழங்குமாறு பிரார்த்தித்தல் உள்ளிட்ட கருத்துகள் அமைந்துள்ளன.
மேலும், மறுமையில் நல்லோருடன் இருப்பதற்காக இம்மையில் நற்செயல்கள் புரியுமாறு ஆர்வமூட்டுவதும், இறைவனின் கோபத்திற்கு ஆளானோர் மற்றும் வழிதவறியவர்களுடன் மறுமையில் எழுப்பப்படாமல் இருக்க, அவர்களின் தவறான வழியில் செல்லலாகாது என எச்சரிக்கை செய்வதும் இந்த அத்தியாயத்தின் உட்பொதிவுகளே.
‘அன்அம்த்த அலைஹிம்’ (உன் அருளைப் பெற்றவர்கள்) எனும் சொற்றொடரில் அருளை இறைவன் பக்கம் இணைத்திருப்பதும், ‘கைரில் மஃக்ளூபி அலைஹிம்’ (சினத்திற்கு ஆளானவர்கள்) எனும் தொடரில் -சினம் கொண்டவன் இறைவனாக இருந்தும்- அந்த எழுவாய் யார் என்பதை வெளிப்படுத்தாமல் மறைத்திருப்பதும் அழகான சொல்லாக்கம் ஆகும். இதைப் போன்றே, ‘வலள் ளால்லீன்’ (வழிதவறியோர்) எனும் சொற்றொடரில் வழிதவறச் செய்தது -விதிப்படி இறைவனே என்றாலும் அது- யார் என்பதை வெளிப்படுத்தாமல் சொல்லாட்சி செய்யப்பட்டிருப்பது சொல் நுட்பத்தில் அடங்கும்.
ஏனெனில், ‘‘யாரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களை நேர்வழியில் செலுத்த எவராலும் முடியாது’’ (7:186) என குர்ஆன் கூறுகிறது. இன்னும் இதைப் போன்ற பல வசனங்கள், ‘‘நேர்வழியில் செலுத்துவதும் தவறான வழியில் விட்டுவிடுவதும் இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் விஷயங்களாகும்’’ எனத் தெரிவிக்கின்றன.
ஆனால், ‘கதரிய்யா’ எனும் கொள்கைவாதிகள் (விதியை மறுப்போர்), அடியார்களே அனைத்தையும் தேர்ந்தெடுத்துச் செயலாற்றும் சக்தி படைத்துள்ளார்கள் என்று கூறுவர். இவர்கள் தங்களின் தவறான இந்தக் கொள்கைக்கு குர்ஆனில் வரும் ‘முத்தஷாபிஹ்’ (பல பொருள்களுக்கு இடமளிக்கும்) வசனங்களை ஆதாரமாகக் காட்டி, வெளிப்படையாகவே தங்களுக்கெதிராக அமைந்துள்ள வசனங்களைக் கைவிட்டுவிடுவார்கள். இதுதான் வழிதவறியோரின் நிலையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பல பொருள்களுக்கு இடமளிக்கும்) முத்தஷாபிஹான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள்தான் இந்த (3:7ஆம்) வசனத்தில் அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதை அறிந்து) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.58
ஆக, இத்தகைய தவறான கொள்கைவாதிகளுக்கு குர்ஆனில் எந்தச் சரியான ஆதாரமும் கிடையாது. குர்ஆன் சத்தியம் - அசத்தியம், நேர்வழி - தவறான வழி ஆகியவற்றைப் பிரித்துக் காட்டவந்த வேதமாகும். அதில் முரண்பாட்டுக்கோ மோதலுக்கோ இடம் கிடையாது. மாறாக, ‘‘அது புகழுக்குரியவனும் விவேகமிக்கவனுமான அல்லாஹ்வினால் அருளப்பெற்றதாகும்.’’ (41:42)