தஃப்சீர் இப்னு கஸீர்
பேரறிஞர், இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் (ரஹ்)
1 : 5 அல்ஃபாத்திஹா
இது இறைவன்முன் நாம் வைக்கும் கோரிக்கையாகும். முதலில் இறைப்புகழ்; அடுத்து கோரிக்கை. இவ்வாறு முதலில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு கோரிக்கையை முன்வைப்பதே பொருத்தமாகும். இதன் மூலம் கோரிக்கை ஏற்கப்படவும், தேவை நிறைவேற்றப்படவும் அதிக வாய்ப்பு உண்டு. ஆகவேதான், இந்த முழுமையான வழியை இறைவன் நமக்குக் காட்டுகின்றான்.
‘நேரான வழியில் செலுத்துவாயாக’ என்பதில் ‘செலுத்துவாயாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘இஹ்தினா’ எனும் வினைச்சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘ஹிதாயத்’ எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். இங்கு ‘ஹிதாயத்’ என்பதற்கு வழிகாட்டுதல், நல்வாய்ப்பளித்தல் என்று பொருள்.
இது செயப்படுபொருள் குன்றா வினையாகும்.51 சில சமயம் இடைச்சொல் துணையின்றியே இது செயப்படுபொருளைக் குறிக்கும். இவ்வசனம் அந்த வகையைச் சேர்ந்ததே. சில வேளைகளில் ‘இலா’ மற்றும் ‘லாம்’ ஆகிய முன்னிடைச்சொற்களின் துணையால் செயப்படுபொருளை இது குறிக்கும். ‘‘பின்னர் அவர்களை நரகத்தின் பாதைக்குக் கொண்டு செல்லுங்கள்’’ எனும் (37:23ஆம்) வசனத்தில் ‘இலா’ என்ற முன்னிடைச்சொல்லும், ‘‘இந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்கான வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனும் (7:43ஆம்) வசனத்தில் ‘லாம்’ எனும் முன்னிடைச்சொல்லும் துணை நிற்கின்றன.
‘நேரான வழி’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அஸ்ஸிராத்துல் முஸ்த்தகீம்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. ‘கோணல் இல்லாத நேரான பாதை’ என்பது இதன் சொற்பொருளாகும். பின்னர் நேரான அல்லது கோணலான சொல் மற்றும் செயல் ஆகிய அனைத்துக்கும் ‘அஸ்ஸிராத்’ எனும் சொல்லை அரபியர் பொதுவாகப் பயன்படுத்தலாயினர்.
இவ்வசனத்தில் ‘அஸ்ஸிராத்’ என்பது எதைக் குறிக்கிறது என்பது தொடர்பாக முற்கால மற்றும் பிற்கால விரிவுரையாளர்கள் பலரும் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். எல்லாக் கருத்துகளின் சாரமும் ஒன்றுதான். ’அல்லாஹ்வையும் அவன் தூதரையும் பின்பற்றுதல்’ என்பதே அது.
சிலர் ‘அஸ்ஸிராத்’ என்பது இறைவேதத்தைக் குறிக்கிறது என்பர். இன்னும் சிலர் இஸ்லாமே இதன் பொருள் என்பர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கோணல் இல்லாத இறைமார்க்கமே நேரான பாதையாகும். இப்னுல் ஹனஃபிய்யா (ரஹ்)52 அவர்கள் கூறியதாவது: அடியார்களிடமிருந்து எந்த மார்க்கத்தை மட்டும் அல்லாஹ் ஏற்பானோ அந்த இறைமார்க்கமே நேரான வழியாகும்.
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸில், ‘அஸ்ஸிராத்’ என்பதற்கு இஸ்லாம் என்றே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேரான வழி (எனும் இஸ்லாமு)க்கு அல்லாஹ் ஓர் உவமை கூறுகிறான்: அது ஒரு சாலை போன்றது. அந்தச் சாலையின் இரு மருங்கிலும் இரு சுவர்கள் உள்ளன. அவற்றில் திறந்த தலைவாயில்களும், தலைவாயில்களில் தொங்கும் திரைகளும் உள்ளன. சாலையின் நுழைவாயிலில் அழைப்பாளி ஒருவர் இருந்து கொண்டு, ‘‘மக்களே! அனைவரும் சாலையில் நேராகச் செல்லுங்கள். (இடையிடையே) வளைந்துபோய் விடாதீர்கள்’’ என்று கூறுகிறார். சாலைக்கு மேலே ஒருவர் இருந்துகொண்டு, சாலையின் இரு மருங்கில் உள்ள வாசல்களில் ஒன்றைத் திறந்து பார்க்க யாரேனும் முற்பட்டால் ‘‘உனக்குக் கேடுதான். அதைத் திறக்காதே. மீறித் திறந்தால் அதற்குள் நுழைய வேண்டியதுதான்’’ என்று கூறுவார்.
அந்த நேரான சாலைதான் இஸ்லாம். இரு புறமும் உள்ள சுவர்கள் அல்லாஹ்வின் சட்ட வரையறைகளாகும். திறந்த தலைவாயில்கள் என்பவை அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ள விஷயங்களாகும். சாலையின் நுழைவாயிலில் நின்று அறைகூவல் விடுக்கும் அழைப்பாளி இறைவேதமாகும். சாலைக்கு மேலேயிருந்து எச்சரிக்கை விடுப்பவர், ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் உள்ள அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட உபதேசி (மனசாட்சி) ஆவார்.53
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அஸ்ஸிராத்துல் முஸ்தகீம்’ (நேரான வழி) என்பது உண்மையைக் குறிக்கும். இது, முன்னால் கூறப்பட்ட கருத்துகளுக்கு முரண்படாத பொதுவான கருத்தாகும்.
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னைப் பொறுத்த வரை இந்த வசனத்திற்குச் சரியான விளக்கம் என்னவென்றால், ‘‘இறைவா! உனக்குப் பொருத்தமான வழியிலும், உன் அருளைப் பெற்ற அடியார்களின் (நற்)சொல், (நற்)செயல் ஆகியவற்றிலும் நாங்கள் நிலைத்திருக்க வழி செய்வாயாக!’’ என்பதே ஆகும். இதுதான் நேரான பாதை. ஏனெனில், இறையருளுக்கு இலக்கான இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள் (ஸித்தீகீன்), வீரத் தியாகிகள் (ஷுஹதா) மற்றும் நல்லோர் (ஸாலிஹீன்) எந்த நல்வழியில் செலுத்தப்பட்டார்களோ அந்த வழியில் செல்லும் வாய்ப்பைப் பெற்றவர் இஸ்லாத்தின்படி நடக்கும் வாய்ப்பைப் பெற்றவர் ஆவார்.
ஐயமும் தெளிவும்
இறைநம்பிக்கையாளர் நேர்வழியில்தானே இருந்துகொண்டிருக்கிறார்! இந்நிலையில் அவர் ஒவ்வொரு தொழுகையிலும், ‘‘நேரான வழியில் செலுத்துவாயாக!’’ என்று கோருவது எப்படிப் பொருந்தும்?
நேர்வழியில் நிலைகுலையாமல் நீடித்து நிலைத்து இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் உதவி மனிதனுக்குத் தேவை. அவ்வாறு நேர்வழியில் நிலைத்திருக்க உதவிடுமாறு எல்லா நேரங்களிலும் பிரார்த்திக்க வேண்டும் என இதன்மூலம் அல்லாஹ் நமக்கு வழிகாட்டுகின்றான். இதற்குச் சான்றாக மற்றொரு வசனத்தைக் கூறலாம்.
‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்மீதும், முன்பு அவன் அருளிய வேதங்கள்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்’’ (4:136) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முந்தைய வேதங்களையும் நம்பியவர்கள்தான் இறைநம்பிக்கையாளர்கள். இவர்களை விளித்து, இவற்றை நம்புங்கள் என்று கூறினால், இந்த நம்பிக்கையில் நிலைத்து நிற்பதற்கொத்த செயல்களில் நீடித்திருங்கள் என்றுதான் பொருள்.