முன்னுரை

ஸஹீஹ் முஸ்லிம் : 0

பாடம் :1 நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்தே ஹதீஸ்களை அறிவிப்பதும், பொய்யர்களின் அறிவிப்புகளைக் கைவிடுவதும் கட்டாயமாகும் என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (அவர்கள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப்) பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கையும். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக! ஆதாரபூர்வமான அறிவிப்புகள் எவை, பலவீனமான அறிவிப்புகள் எவை, நம்பத்தகுந்த அறிவிப்பாளர் யார், சந்தேகத்திற்குள்ளான அறிவிப்பாளர் யார் எனப் பகுத்தறியும் திறன் யாருக்கு இருக்கிறதோ அவர் தாம் அறிந்த தரமான மற்றும் நேர்மையான அறிவிப்பாளர் அறிவித்துள்ள ஹதீஸ்களை மட்டுமே அறிவிப்பது அவசியமாகும். சந்தேகத்திற்கு உள்ளானவர்கள், புதிய வழக்கங்களில் பிடிவாதமாக இருப்பவர்கள் ஆகியோரால் அறிவிக்கப்பெற்ற ஹதீஸ்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும். நாம் கூறிய இக்கருத்தே சரியானதாகும் என்பதற்குப் பின்வரும் இறைவசனங்கள் சான்றுகளாகும்: அல்லாஹ் கூறுகின்றான்: நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்;பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கவலைப்படுபவர்களாக ஆவீர்கள் (49:6). அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் விரும்புகின்ற சாட்சிகளில் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சியம் அளிக்க வேண்டும் (2:282). உங்களில் இரு நேர்மையாளர்களைச் சாட்சிகளாக வைத்துக்கொள்ளுங்கள் (65:2). இவ்வசனங்களிலிருந்து தீயவனின் செய்தியும் நேர்மையில்லாதவனின் சாட்சியமும் ஏற்கத் தக்கவை அல்ல என்று தெரிகிறது.தகவல் அறிவித்தல், சாட்சியம் அளித்தல் ஆகிய இவ்விரண்டின் பொருளும் சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில் அவ்விரண்டும் ஒன்றுபட்டே இருக்கின்றன. கல்வியாளர்களிடம் தீயவனின் சாட்சியம் ஏற்கப்படாததைப் போன்றே, தீயவனின் தகவலும் அவர்கள் அனைவராலும் நிராகரிப்பட்டுள்ளது. தீயவன் கூறும் செய்திக்கு இடமில்லை எனக் குர்ஆன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போன்றே, மறுக்கப்பட்ட அறிவிப்பாளரின் ஹதீஸிற்கும் இடமில்லை என நபிமொழி சுட்டிக் காட்டுகிறது. இது குறித்து பிரபலமான நபிமொழி ஒன்று வந்துள்ளது.
0.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.இந்த ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தும் சமுரா பின் ஜுன்தப் (ரலி)அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகிறது.

of