அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்
அன்னாரின் இயற்பெயர் அப்துல்லாஹ். இஸ்லாத்திற்கு முன்பு இவர்களின் பெயர் அப்துல் ‘கஅபா’ என்று இருந்ததாகக் கூறப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் இளமைக் காலத் தோழரும், நபி (ஸல்) அவர்களைவிட இரண்டு அல்லது மூன்று வயது இளையவரும் ஆவார். நபியவர்களைப் போன்று, இவர்களும் குறைஷி குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆறாவது பாட்டனார் முர்ரா ஆவார். (அபூபக்ர் பின் அபீ குஹாஃபா பின் ஆமிர் பின் அம்ர் பின் கஅப் பின் சஅத் பின் தைம் பின் முர்ரா). இவரே நபியவர்களின் ஆறாவது பாட்டனார் ஆவார். (முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் பின் ஹாஷிம் பின் அப்து மனாஃப் பின் குஸை பின் கிலாப் பின் முர்ரா).
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடைய தந்தையின் இயற்பெயர் உஸ்மான் என்பதாகும். குறிப்புப் பெயர் அபூகுஹாஃபா என்பதாகும். தாயாரின் பெயர், சல்மா பின்த் ஸக்ர் (உம்முல் கைர்). நபியவர்களின் தோழமையிலேயே இவரின் வாழ்க்கை தொடர்ந்தது. நபியவர்களை நன்கு புரிந்தவர்களாகவும் அன்னாரை எப்போதும் உண்மைப்படுத்துபவராகவும் இருந்தார்கள். நபியவர்களுக்கு வேத வசனங்கள் இறங்கி, அவர்கள் இறுதி நபி என்ற தகுதியைப் பெற்ற பின்னர் முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெரியவர் அபூபக்ர் (ரலி) அவர்களே.
நபி (ஸல்) அவர்கள் ‘மிஅராஜ்’ எனும் விண்ணேற்றப் பயணம் மேற்கொண்டு திரும்பியதைக் கேள்விப்பட்டவுடன், அதனை உண்மைப்படுத்தியதால், ‘ஸித்தீக்’ (மிகவும் உண்மைப்படுத்துபவர்; பேருண்மையாளர்) என்ற பெயருக்குரியவரானார்கள். இயல்பாகவே இரக்க குணம் உடையவராக இருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள், நலிந்தோருக்கு உதவுபவராகவும், அடிமைகளை அவர்களின் அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பவராகவும் இருந்தார்கள். இதனால்தான் அவர்களுக்கு, ‘அத்தீக்’ (அடிமைத்தளையை அகற்றுபவர்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இச்சமுதாயத்தில், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் மிகச் சிறந்தவர், அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆவார்கள். உஸ்மான், தல்ஹா, ஸுபைர், சஅத், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) போன்றோர் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமே இஸ்லாத்தை தழுவினர் என்பது குறிப்பிடத் தக்கது.
நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ‘ஹிஜ்ரத்’ பயணத்தின்போது, நபி (ஸல்) அவர்களுக்குத் துணை நின்ற தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களே ஆவார்கள். அப்பயணத்தில் ‘ஸவ்ர்’ குகைக்குள் இருவரும் ஒளிந்திருந்த சம்பவத்தை இறைவனே தனது குர்ஆனில் (9:40) பேசுகிறான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் பத்ர், உஹுத், அகழ்ப் போர், தபூக் முதலான போர்களில் நபியவர்களுடன் இணைந்து போரிட்டுள்ளார்கள். வரலாறு முக்கியத்துவம் கண்ட ‘ஹுதைபிய்யா’ உடன்படிக்கை போன்ற நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்கள். நபியவர்கள், ‘சொர்க்கத்திற்குரியோர்’ என்று நற்செய்தி கூறிய பத்து குறைஷியருள் முதலாமவர் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களே ஆவார்கள்.
தாம் மட்டுமன்றி, தம் பெற்றோர், தாம் பெற்றெடுத்த பிள்ளைகள் அனைவரையும் இஸ்லாத்தில் ஒன்றிணைத்துப் பெருமை பெற்றவர் அபூபக்ர் (ரலி). அத்துடன், தம் அருமை மகள் ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததன் மூலம், நபியின் மாமனார் என்ற தகுதியையும் பெற்றார்கள்.
“அபூபக்ரின் மீது அல்லாஹ் அருள்புரிவானாக! அவர் தம் மகளை எனக்கு மணம் செய்து வைத்தார். ‘தாருல் ஹிஜ்ரா’ (என்ற மதீனா)வின் பக்கம் என்னை வழிநடத்திச் சென்றார். மேலும், தனது பொருளைக் கொண்டு (அடிமை) பிலாலை விடுவித்தார்” என்று நபிகள் பெருமானார் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றிப் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின்னர், இஸ்லாமிய உலகின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அப்பொறுப்பில் 2 ஆண்டுகளும் மூன்று மாதங்களும் பத்து நாட்களும் இருந்து அசைவுறாத ஆட்சியை நடத்திக் காட்டினார்கள். இக்கால கட்டத்தில் ‘ஸகாத்’ மறுப்பாளர்களை ஒடுக்கினார்கள். போலி நபி முசைலிமாவை அழித்தார்கள். நபியின் இறப்புக்குப்பின் மதமாறிய சந்தர்ப்பவாதிகளோடு போரிட்டு மார்க்கத்தைக் காத்தார்கள். அன்னாரின் ஆட்சியில் அரேபியா தீபகற்பத்துக்கு வெளியிலும் இஸ்லாம் பரவியது. இராக், சிரியா ஆகிய நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன.
ஹிஜ்ரீ 13ஆம் ஆண்டு, ஜுமாதல் ஊலா மாதம் தமது 63ஆவது வயதில் இறப்பெய்தி, நபி (ஸல்) அவர்களின் மண்ணறை அருகில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
சான்றேடுகள்:
- ஃபத்ஹுல் பாரீ,
- உம்தத்துல் காரீ,
- உஸ்துல் ஃகாபா,
- அல்காமில் ஃபித்தாரீக்,
- தஃப்சீர் இப்னு கஸீர்.