ஈமான் எனும் இறைநம்பிக்கை
ஸஹீஹுல் புகாரீ : 50
0:00 / 0:00
(37) بَاب سُؤَالِ جِبْرِيلَ النَّبِيَّ ^ اْلإِيْمَانِ، وَالإِسْلاَمِ، وَالإِحْسَانِ،
وَعِلْمِ السَّاعَةِ. وَبَيَانِ النَّبِيِّ ^.
ثُمَّ قَالَ: جَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَم يُعَلِّمُكُمْ دِينَكُمْ فَجَعَلَ ذلِكَ كُلَّهُ دِينًا. وَمَا بَيَّنَ النَّبِيُّ ^ لِوَفْدِ عَبْدِالْقَيْسِ مِنَ الإِيمَانِ. وَقَوْلِهِ تَعَالَى: ﴿وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ﴾.
50-حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ إِبْرَاهِيمَ قَالَ أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ ^ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِالله وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ، وَتُؤْمِنَ بِالْبَعْثِ.
قَالَ: مَا الإِسْلاَمُ؟ قَالَ: الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ الله وَلاَ تُشْرِكَ بِهِ، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ. قَالَ: مَا الإِحْسَانُ؟ قَالَ: أَنْ تَعْبُدَ الله كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ. قَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ. وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا؛ وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ الله. ثُمَّ تَلاَ النَّبِيُّ ^: ﴿إِنَّ الله عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ﴾.
ثُمَّ أَدْبَرَ. فَقَالَ: رُدُّوهُ. فَلَمْ يَرَوْا شَيْئًا. فَقَالَ: هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ.
قَالَ أَبُو عَبْد الله: جَعَلَ ذَلِك كُلَّهُ مِنَ الإِيمَانِ.
பாடம் : 37
ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் குறித்து (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேள்வி கேட்டதும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும்
பின்னர் “உங்களின் மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத்தருவதற்காக ஜிப்ரீல் வந்திருந்தார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.
நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அளித்த பதில்கள் அனைத்தையும் மார்க்கமாகவே (‘தீன்’) கருதியிருக்கிறார்கள் என்பதும்.
அப்துல் கைஸ் தூதுக் குழுவினருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியவை (யாவும்) இறைநம்பிக்கையின் அம்சங்கள்தான் என்பதும்.
“இஸ்லாம் அல்லாத (வேறொரு) மார்க்கத்தை யாரேனும் விரும்பினால், அது அவரிடமிருந்து ஒருபோதும் ஏற்கப்படாது’’ (3:85) எனும் இறைவசனமும்.38
50.
50 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள்முன் (வெளிப்படையாக) வந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “ஈமான் என்றால் என்ன?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனது சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதும் ஆகும்’’ என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், “இஸ்லாம் என்றால் என்ன?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வழிபடுவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையாக்கப்பட்ட ஸகாத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’’ என்றார்கள்.
அடுத்து “இஹ்ஸான் என்றால் என்ன?’’ என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வழிபடுவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வழிபடுவதாகும்)’’ என்றார்கள்.39
அடுத்து அவர் “மறுமை (நாள்) எப்போது?’’ என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இதைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டவர் (அதாவது நான்), கேள்வி கேட்பவரைவிட (அதாவது உம்மைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (ஆயினும்,) மறுமையின் அடையாளங்கள் சிலவற்றை உமக்கு அறிவிக்கிறேன்.
(அவை:) ஓர் அடிமைப் பெண் தன் உரிமையாளனைப் பெற்றெடுத்தல்;40 கறுப்பு நிற (மட்டமான) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்’’ என்று கூறிவிட்டு, “உலக முடிவு பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது...’’ (31:34) எனும் இறைவசனத்தை ஓதினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள்’’ என்றார்கள். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கும் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இ(ப்போது வந்துபோன)வர்தான் (வானவர்) ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தை (தீன்) கற்றுத்தர வந்திருந்தார்’’ என்றார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு தாம் அளித்த பதில்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையின் (‘தீன்’) அம்சங்களாகவே கருதினார்கள்.
of